சென்னை: போலியான பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய வேண்டும், அசல் ஆவணங்களை கொண்டு பத்திரப்பதிவு செய்ய பத்திரப்பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பத்திரப்பதிவு தொடர்பான பல்வேறு வழக்குகளின் விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட் வில்சன், தமிழ்நாடு சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார். ”மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவாளர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
முறைகேடான பதிவுகளை செய்த பதிவு அலுவலருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த சட்ட மசோதாவில், பத்திரப்பதிவு ஐஜியிடம் மேல்முறையீடு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஆர். சுரேஷ்குமார், பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய உத்தரவிடக்கோரிய அனைத்து ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ”ஒரு ஆவணத்தை பதிவு செய்தவுடன் அதை ரத்து செய்ய பதிவுத்துறை அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால் மனுதாரர்கள் சிவில் நீதிமன்றத்தை அணுகுங்கள்.
ஆவணங்களை ரத்து செய்வதற்கான வழிமுறைகளை பத்திரப்பதிவுச் சட்டத்தில் பிரிவுகள் 77-ஏ 77-பி ஐ அறிமுகப்படுத்தி சமீபத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பதிவுச் சட்டத் திருத்த மசோதாவையும் உயர் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட விதிகளின் கீழ், மோசடியான ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறை அலுவலர்களை அணுகலாம். திருத்தச்சட்ட பிரிவு 77-ஏ மற்றும் 77-பி நடவடிக்கைகளில் மேல்முறையீடுகளை விசாரிக்க சட்டப்பூர்வ நபர்களைக் கொண்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்படலாம்” என்று தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இந்த தீர்ப்பாயத்தில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி, பத்திரப்பதிவு துறை ஐஜி வருவாய்த்துறை அலுவலர்கள் இடம்பெறவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி - முதலமைச்சர் மரியாதை