தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர்களுக்கு 2 பருவத் தேர்வுகள் நடத்தப்படும். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒரு பருவத்தேர்வும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஒரு பருவத்தேர்வும் நடத்தப்படும். இந்நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16 முதல் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கழகத்தின் அறிவுரையின் படி, மாணவர்களுக்கு இணையம் மூலம் பாடம் நடத்தப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக கல்வித்திட்ட அட்டவணை படி மார்ச் 16 ஆம் தேதி வரை 80 விழுக்காடு பாடங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக அலுவலர்களிடையே கேட்டபோது, “இணைய வழி வகுப்புகளை அனைத்து பொறியியல் கல்லூரிகளும் நடத்தியிருக்க வாய்ப்பு இல்லை. கல்லூரிகளில் இருந்த மாணவர்கள் விடுமுறையை தொடர்ந்து தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். மாணவர்களுக்கான தேர்வுக்கு உரிய வினாத்தாள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், பொறியியல் படிப்பில் நடப்பு கல்வியாண்டில், இளநிலை மற்றும் முதுகலை வகுப்புகளில் 80 விழுக்காடு பாடங்களுக்கு மட்டும் தேர்வு எழுத ஆலோசித்து வருகிறோம்.
இளநிலை மற்றும் முதுகலை செய்முறை தேர்விலும், செய்முறைகளின் எண்ணிக்கை குறைப்பு 80 விழுக்காடு அளவு மட்டும் இடம்பெறும். அரியர் வைத்துள்ளவர்களுக்கு இது பொருந்தாது. தற்போதுள்ள சூழலில் தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை“ எனக் கூறினர்.
இதையும் படிங்க: முன்னணி மோட்டார் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர்!