சென்னை: கரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டது எனவும், தமிழ்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு வேட்பாளர் குஷ்பு-வை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தேனாம்பேட்டை சிக்னல் அருகே திறந்த வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார். அமித்ஷாவை வரவேற்க பழைய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாடல்கள் இசைக்கப்பட்டன. ஆனால், அதிமுக கொடி அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது, முழுக்க பாஜகவின் காவிக் கொடிகள் பறந்த வண்ணம் இருந்தன.
அமித்ஷா பேசுவதற்கு மேடை அமைக்கப்பட்டிருந்தது, நேரமின்மையால் பேசுவது ரத்து செய்யப்பட்டது. இறுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமித்ஷா, அதிமுக அரசு கரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டது. அதிமுக தமிழ்நாட்டை சிறந்த முறையில் நிர்வகித்து வருகின்றனர். நான் மக்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன், நீங்கள் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். தமிழ்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும். மேலும், ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றியடையச் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.