சென்னை: அம்பத்தூர் காந்தி நகர் தாலுகா அலுவலகம் அருகில் வசித்துவரும் வடமாநிலத் தம்பதியினர் கிஷோர் - புத்தினி. இவர்களது ஒன்றரை வயதான ‘லாக் டவுன்’ எனப் பெயரிடப்பட்ட குழந்தை கடந்த ஆறாம் தேதி காணாமல்போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இப்புகாரின் அடிப்படையில், குழந்தையைத் தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில், நேற்றிரவு (பிப்ரவரி 8) பேருந்து நடத்துநர் ஒருவர் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு வந்து காவல் ஆய்வாளர் குணசேகரனிடம் குழந்தை ஒன்று பேருந்தில் அழுதுகொண்டிருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாகப் பேருந்துக்குச் சென்று பார்த்தபோது, அம்பத்தூரில் காணாமல்போன அதே குழந்தை எனத் தெரியவந்தது. சேலத்திலிருந்து சென்னை கோயம்பேட்டிற்கு வந்த பேருந்தில் குழந்தை இருப்பதைக் கண்டு காவல் துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை
குறிப்பாக, காவல் ஆய்வாளர் குணசேகரன் தனது செல்போனில், அம்பத்தூரில் குழந்தை காணாமல்போன செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, நடத்துநர் தகவல் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, பெற்றோரை வரவழைத்து குழந்தையை ஒப்படைத்தனர்.
மேலும், குழந்தையைக் கடத்திய நபர்கள் யார்? எதற்கு கொண்டுசென்றார்கள் என்ற விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்யும் பணியைத் தொடங்கிவிட்டதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேடுதல் பணியில் ஈடுபட்ட தனிப்படை காவலர்களை, ஆவடி காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: தொடரும் அநீதி: 29 மீனவர்களை மீட்க பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்