தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலும், காலியாக இருக்கும் 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்க இருக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகள் இல்லாமல் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் சந்திக்கவிருக்கும் முதல் தேர்தல் இது என்பதால், வெற்றிபெற வேண்டுமென்பதில் இரண்டு கட்சிகளும் முனைப்பு காட்டிவருகின்றன.
இதற்கிடையே, அதிமுகவிலிருந்து கழற்றிவிடப்பட்ட டிடிவி தினகரன் அக்கட்சியின் வாக்குகளை பிரிப்பார் என அரசியல் நோக்கர்கள் கூறிவருகின்றனர். இது இப்படியிருக்க திமுகவுக்கு எதிராக மு.க.அழகிரி இந்தத் தேர்தலில் வேலைகள் செய்வாரோ என உடன்பிறப்புகள் சந்தேகித்துவருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”பல சந்தர்ப்பங்களில் வெளியாகும் கருத்துக் கணிப்புகள் பொதுவாக எடுபடாது. அவை கருத்துத் திணிப்புதான். மக்களிடம்தான் முடிவு உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.
திமுக படுதோல்வி அடையும் என்று மு.க.அழகிரியே கூறியுள்ளார். அவ்வாறு நடக்கும்போது, அந்தக் கட்சிக்கு மு.க.அழகிரி தலைவராவது உறுதி” என்றார்.