மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலைப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு, அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 23 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், நிவர் புயல் காரணமாக நவம்பர் 24 ஆம் தேதி முதல் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பொதுப்பிரிவு மாணவர்களுக்கு இன்று மீண்டும் தொடங்கிய கலந்தாய்வு வரும் பத்தாம் தேதி வரை நடக்கிறது.
இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு கூறியபோது, ” கடந்த 5 நாட்களாக மழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மருத்துவப்படிப்பு கலந்தாய்வு இன்று மீண்டும் தொடங்கி, 390 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
எம்பிபிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2,440 இடங்களும், தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 1,060 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 151 இடங்களும், தனியார் பல் மருத்துவக்கல்லூரிகளில் 985 இடங்களும் காலியாக உள்ளன.
மாணவர்களின் இருப்பிடச் சான்றுகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வில் இருப்பிடச் சான்றிதழ் போலி எனக் கண்டறியப்பட்டால் மாணவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் மருத்துவக்கல்லூரிகளை தேர்வு செய்த 399 மாணவர்களும் கட்டணமின்றி கல்லூரியில் சேர்ந்துள்ளனர் ” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் ரத்தான தேர்வுக்கு கட்டணம் வசூலித்தது செல்லும்!