மாநிலம் முழுவதும் கரோனா தொற்று பரவி வரும் இந்த சூழலில், பொது சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கரோனா வைரஸ் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், அழகு நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதனால், அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சிகை அலங்காரம் மற்றும் அழகு நிலையங்களில் உள்ளவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து கடைகளை திறக்க அறிவுரை வழங்கலாம்.
மருத்துவமனைகளில் மறுநாள் நடைபெறும் அறுவை சிகிச்சைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை, கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்து தனித்தனியாக முதல் நாளே தயார் நிலையில் வைத்திருப்போம். அதேபோல, முடி திருத்தும் நிலையம் மற்றும் அழகு சாதன நிலையங்களிலும் மறுநாள் வருபவர்களுக்கு ஏற்ப, தனித்தனியாக அதற்குரிய கருவிகளை முதல் நாளே சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.
மேலும், முடி திருத்தும் கடைகளில் திருத்துபவர் மூலமோ அல்லது வெளியில் இருந்து வருபவர் மூலமோ, நோய் தொற்றும் வாய்ப்பு அதிகம் உள்ளது. 1980ஆம் ஆண்டு எச்ஐவி தொற்று வந்தபோது முடி திருத்தும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பொது சுகாதாரத்துறை பயிற்சி அளித்தது. அப்போது, பயன்படுத்திய பிளேடை கிருமி நாசினி மூலம் அழிக்க வேண்டுமென அறிவுரை வழங்கி இருந்தோம். அதேபோன்று, தற்போதும் அவர்களுக்கு சில பயிற்சிகளை அளித்து கடைப்பிடிக்கச் சொல்லி, அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் முடி திருத்தும் நிலையங்களை திறக்கலாம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் தேநீர்க் கடைகள்... இயல்பு நிலைக்குத் திரும்பிய சென்னை!