தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் ஆகிய இருவர் காவல் துறை விசாரணையின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம் அடைந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த துயர நிகழ்வு துரதிருஷ்டவசமானதும், மிகவும் வேதனைக்குரியதுமாகும்.
இத்தகைய வேதனை அளிக்கும் சம்பவங்களை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. குடும்பத்தின் இரண்டு தூண்களை இழந்துவாடும் அக்குடும்பத்தினருக்கு அதிமுக தனது ஆழ்ந்த இரங்கலையும் , அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், அதிமுக சார்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் குடும்பநல நிதியுதவி வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு திமுக சார்பிலும் 25 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவம்: மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரளித்த கனிமொழி எம்.பி!