முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையரிடம் அண்மையில் பரபரப்பு புகார் அளித்திருந்தார். அதில், "தானும் அமைச்சரும் ஒன்றாக வாழ்ந்தோம். தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி அவர் ஏமாற்றியதுடன், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்து, அந்தரங்கப் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டினார்" எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மணிகண்டன் விளக்கம்;
இதற்கு விளக்கம் அளித்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தனக்கும் அந்த நடிகைக்கும் தொடர்பில்லை என்றும், தன்னிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் நடிகை சாந்தினியும், அவரது வழக்கறிஞர் சுதன் என்பவரும் பொய் புகார் அளித்ததாக தெரிவித்தார். மேலும், வழக்கறிஞர் சுதன் தன்னிடம் மூன்று கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குற்றஞ்சாட்டினார்.
![actress Chandini who filed Case against former admk Minister Manikandan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11957271_thu.jpg)
வழக்கறிஞர் சுதன் நோட்டீஸ்:
இதையடுத்து, தன்னை குறித்து அவதூறு பரப்பியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு வழக்கறிஞர் சுதன் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
5 பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு:
இந்நிலையில் நடிகை சாந்தினி அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சட்டப்பிரிவு 323 வேண்டுமென்றே காயப்படுத்துதல், சட்டப்பிரிவு 313 பெண்ணிடம் அத்துமீறி செயல்படுதல், சட்டப்பிரிவு 417 நம்பிக்கை மோசடி, சட்டப்பிரிவு 376 ஒன்றுக்கு மேற்பட்ட முறை பாலியல் பலாத்காரத்தில் செயல்படுதல், சட்டப்பிரிவு 506(1) கொலை மிரட்டல், சட்டப்பிரிவு 67 A IT ACT ஆபாசத்தை உள்ளடக்கிய புகைப்படங்களை வெளியிடுதல், பகிர்தல் உள்ளிட்ட உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.