கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் 12ஆம் வகுப்பு மாணவி சந்தேக மரண வழக்கில் நீதி கேட்டு நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் தனியார் பள்ளி சூறையாடப்பட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த வன்முறை வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு விசாரணைக்குழுவை காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அமைத்தார்.
சைபர் கிரைம் தீவிரம்: சேலம் சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் 6 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 9 காவல் ஆய்வாளர்கள், மூன்று சைபர் கிரைம் பிரிவு காவல் துறையினர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் கடலூர், வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச்சேர்ந்த 12 காவல் ஆய்வாளர்கள் உட்பட 56 பேர் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு விசாரணையை நடத்தி வருகின்றனர். 3 பிரிவுகளாகப் பிரிந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்தக்குழுவில் சைபர் கிரைம் பிரிவில் திறம்பட செயல்படும் ஒரு தலைமைக்காவலர், 2 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தொழில்நுட்ப ஆதாரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வன்முறையில் ஈடுபட பலர் பைக்குகள், கார்கள் போன்ற வாகனங்களில் வந்துள்ளது தொடர்பான வீடியோக்கள், சிசிடிவி காட்சிகளை சிறப்பு விசாரணைக்குழு கைப்பற்றி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
பதிவுஎண் மூலம் விசாரணை: அவர்கள் வந்த வாகனங்களின் பதிவுஎண்களை வைத்து சுமார் 50-க்கும் மேற்பட்டோரை சிறப்பு விசாரணைக்குழு கண்டறிந்து உள்ளதாக கூறப்படுகிறது. வட்டாரப்போக்குவரத்துத்துறை அலுவலர்களுடன் இணைந்து காவல் துறையினர் உரியவர்களைக் கண்டறியும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர்.
அவர்களின் முகவரிகளை வைத்து கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வன்முறையாளர்கள் வந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பள்ளியின் பின்புறம் வழியாகவும் அதிகமான பேர் நுழைந்து இருப்பதை விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கலவரம்: செல்போன் விவரங்கள் சிபிசிஐடி போலீசார் சேகரிப்பு