கரோனா வைரஸ் சென்னையில் வேகமாகப் பரவி வரும் சூழலில், அதனைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பத்து அரசு கரோனா ஆய்வகங்கள், 13 தனியார் ஆய்வகங்கள் மூலம் தற்போது சென்னையில் கரோனா சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆய்வகங்களில் எடுக்கப்படும் பரிசோதனைகளில் யாருக்கேனும் கரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்களின் முழு விவரத்தையும் சுகாதாரத் துறைக்கும், மாநகராட்சிக்கும் தெரிவிக்க வேண்டும்.
ஆனால், கரோனா கண்டறிதல் சோதனைக்கு வரும் நபர்களில் சிலருக்கு, ஒருவேளை கரோனா உறுதி செய்யப்பட்டால், 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவோம் என்ற அச்சத்தில், தவறான கைப்பேசி எண், முகவரி ஆகியவற்றைக் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கரோனா பாதிக்கப்பட்டவரைக் கண்டறிவதில் அலுவலர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
இதேபோல், சில தனியார் ஆய்வகங்கள் நோய் பாதிக்கப்பட்டவர்கள் விவரங்களைச் சரியாக அரசுக்கு அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மேலும், இங்கு சோதனை செய்து கொள்பவர்களுக்குப் பரிசோதனை முடிவுகளைக் கூட சரியாகத் தெரிவிப்பதில்லை. இதன் விளைவாக நோய் பாதித்தவர் மூலம் அவருக்குத் தெரியாமலேயே கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.
![கரோனா பரிசோதனைக்கு ஆதார் கட்டாயம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7461794_adhar-image.jpg)
இந்தச் சிக்கலை தவிர்ப்பதற்காக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், “கரோனா பரிசோதனை செய்யும் முன், சோதனை செய்ய வருபவர்கள் தரும் கதவு எண், தெரு பெயர், அஞ்சல் குறியீடு, ஆதார் விவரங்கள் ஆகியவை சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். அத்துடன் அவர்கள் கொடுக்கும் கைப்பேசி எண்ணும் சரியாக உள்ளதா என்பதை உறுதிசெய்த பின்னரே, பரிசோதனை செய்ய வேண்டும். ஆதார் அட்டை இல்லாதவர்களைப் பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோடம்பாக்கத்தில் அதிகரிக்கும் கரோனா - ஆணையர் நேரில் ஆய்வு!