புதுச்சேரி: புதுச்சேரியின் கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்துவேல். இவர் நேற்று முந்தினம் (நவம்பர் 20) வில்லியனூர் சாரங்கபாணி ஆற்றின் வழியாகச் சென்றுள்ளார். அப்போது கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் முத்துவேல் சிக்கிக் கொண்டார்.
இதனையடுத்து அங்கிருந்த கருவேல மரத்தைப் பிடித்துக்கொண்டு காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பியுள்ளார். இதனைக் கண்ட மக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் இறங்கினர்.
உயிரைக் காப்பாற்றிய காற்று நிரப்பிய ட்யூப்
அப்போது காற்று நிரப்பிய டியூப் ஒன்றை முத்துவேல் மீது, தீயணைப்புத் துறையினர் வீசினர். பின்னர் மீட்புப் பணியின்போது கயிறு அறுபட்டு மீண்டும் அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கியவரை, ட்ரோன் கேமரா மூலம் தேடும் பணி நேற்றும் (நவம்பர் 21) தொடர்ந்து நடைபெற்றது.
அப்போது ஒரு பகுதியில் காற்று நிரப்பிய டியூப் ஒன்று ஒதுங்கிக் கிடப்பதை தீயணைப்புத் துறையினர் கண்டறிந்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்களிடம் காவல் துறையினர் விசாரித்தபோது, முத்துவேல் வெள்ளத்திலிருந்து தப்பித்து, தனது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு வீட்டுக்குச் சென்றது தெரியவந்தது. பின்னர் முத்துவேலைத் தொடர்புகொண்ட காவல் துறையினர், அவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்தனர்.
இது குறித்து வெள்ளத்தில் மீட்கப்பட்ட முத்துவேல் பேசுகையில், "மீட்புப் பணியின்போது கயிறு பாதியில் அறுந்தது. ஓரளவு நீச்சல் தெரிந்ததால் தப்பித்து வீட்டுக்கு வந்தேன். மேலும் காவல், தீயணைப்புத் துறையினருக்குச் சிரமம் கொடுத்ததால், பயந்துகொண்டு உயிர் பிழைத்த தகவலைத் தெரிவிக்கவில்லை. அதற்காக என்னை மன்னிக்க வேண்டும்” என்றார்.
காவல் துறைக்கு அஞ்சி கரை சேர்ந்ததைத் தெரிவிக்காத நபரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்புத் துறையினர் தொடர்புகொண்டு பேசிய பின்னரே வெள்ளத்தில் சிக்கிப் பிழைத்த நபரின் பெயர் முத்துவேல் என்பதே தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Affection: ஈன்ற குட்டியைப் பிரித்ததாக நினைத்த தாய் எருமையின் பாசப்போராட்டம்!