லெபனான் நாட்டின் துறைமுக வெடிவிபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அந்த வெடிவிபத்துக்கான காரணம் அம்மோனியம் நைட்ரேட் தீபிடித்து எரிந்ததுதான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனால் அனைத்து நாடுகளும் அம்மோனியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப்பொருள்களை பாதுகாப்புடன் வைக்க முடிவு செய்தன.
அதன்படி மத்திய அரசு அபாயரமான வேதிப் பொருள்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது.
இதற்கிடையில் 2015ஆம் ஆண்டு கரூர் அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்த 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டு சென்னையில் வைக்கப்பட்டிருந்தது.
அதனால் அவற்றை அகற்ற வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை எழுப்பினர். இதுகுறித்து சுங்கத்துறை அலுவலர்கள், "பறிமுதல் செயயப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் 37 கண்டெய்னர்களில் மணலி வேதி கிடங்கில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு 20 கி.மீ. வெளியிலும் 2. கிமீ தொலைவிற்கு குடியிருப்புகள் இல்லாத பகுதியில் அவை வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சுங்கத்துறையின் இணை இயக்குநர் சமய முரளி செய்திகுறிப்பில், "அம்மோனியம் நைட்ரேட் மின்னனு ஏலத்தில் விற்கபட்டு விட்டது. இன்னும் ஓரிரு நாள்களில் அவற்றைப் பாதுகாப்பாக அகற்றும் பணியில் ஈடுபட உள்ளோம்.
குறிப்பாக பறிமுதல் செய்யப்பட்டு கிடங்கில் வைக்கப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டில் 50 மெட்ரிக் டன் 2015ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்டது. மீதமுள்ள 690 டன் அம்மோனியம் நைட்ரேட் ஏலம் விடப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: சென்னையில் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்; நகருக்கு ஆபத்தா?