சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்வதற்காக, சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு அதன்மீது இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.
40 டன் எடை கொண்ட வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் பாலம் அமைக்கப்பட்டது. அந்தப் பாலத்தின் மீது கடந்த மாதம் 90 டன் எடை கொண்ட லாரி ஒன்று சென்றபோது பள்ளம் ஏற்பட்டு அதில் விழுந்து சிக்கியது. பின்னர் வண்டியை மீட்டெடுத்து பாலத்தை மெட்ரோ நிர்வாகத்தினர் மீண்டும் சரி செய்தனர்.
இந்நிலையில் நிவர் புயலின் தாக்கத்தால், சென்னையில் தொடர் மழை பெய்து வரும் சூழலில், பூந்தமல்லியில் இருந்து 60 டன் எடை கொண்ட பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி, அந்த பாலத்தின் மீது வந்த போது பாலத்திற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகள் வளைந்தன. இதனால் வலுவிழந்த அப்பாலம் மீண்டும் சேதமானது. பின்னர் அப்பகுதியில் 20 அடி ஆழத்திற்கு பெரும் பள்ளமும் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் இரும்பு பாலம் அமைக்கும் பணியை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வழக்கம்போல போக்குவரத்து இயக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பராமரிப்பில்லாத வடிகால்களால் சாலையில் தண்ணீர் தேங்கிய அவலம்!