சென்னை: சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் சுந்தர், தனியார் வங்கியில் துணை மேலாளராகப் பணிபுரிந்துவருகிறார். அவரது அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்திவைத்திருந்த தனது இருசக்கர வாகனம் காணாமல்போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது பற்றி செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் நவீன் சுந்தர் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து செம்மஞ்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்துத் தேடிவந்தனர்.
சிசிடிவி ஆய்வு
காவல் துறையினர் அங்குப் பாதுகாப்புக்காகப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து கேமராவில் பதிவான காட்சியை வைத்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைத் தேடிவந்தனர்.
இந்நிலையில் சோழிங்கநல்லூர்-மேடவாக்கம் செம்மொழி பிரதான சாலையில், செம்மஞ்சேரி காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை மடக்கி இருசக்கர வாகனத்தின் ஆவணங்களைச் சோதனை செய்தனர்.
இருவர் கைது
அப்போது அவர்கள் முன்னுக்குப் பின்னாகப் பேசியதால் சந்தேகமடைந்த காவல் துறையினர் மேலும் அவர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் சிங்கபெருமாள்கோவில் பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் (எ) விஜய் (23), கண்ணகி நகரைச் சேர்ந்த விக்டர் (எ) விக்கி (23) என்பதும் தெரியவந்தது.
இதன் தொடர்ச்சியாக, இவர்கள் இருவரும் தொடர்ந்து இருசக்கர வாகனத்தைத் திருடுவதையே தொழிலாக வைத்திருந்ததும் தெரியவந்தது.
பின்னர், இருவரையும் கைதுசெய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவரும் சேர்ந்து சோழிங்கநல்லூரில் உள்ள நவீன் சுந்தரின் இருசக்கர வாகனத்தைத் திருடியதை ஒப்புக்கொண்டனர்.
மாநகர காவல் ஆணையர் பாராட்டு
இதன் தொடர்ச்சியாக, திருடுபோன நவீன் சுந்தரின் வாகனத்தையும், குற்றவாளிகள் ஓட்டிவந்த வாகனத்தையும் பறிமுதல்செய்த செம்மஞ்சேரி காவல் துறை இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறப்பாகச் செயல்பட்டு இருசக்கர வாகனத்தைத் திருடிய நபர்களைக் கைதுசெய்த செம்மஞ்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையிலான தனிப்படை காவல் துறையினருக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி வெகுவாகப் பாராட்டினார்.
இதையும் படிங்க: மழையில் நனைந்த நெல்மூட்டைகள்: டாஸ்மாக்கிற்கு உள்ள முக்கியத்துவத்தை அரசு இதற்குத் தருமா?