சென்னை: 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள், 38 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், இந்த கல்வியாண்டில் சூளைமேடு சென்னை அரசு உயர்நிலைப் பள்ளியில் மட்டுமே 100 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த கல்வியாண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 100 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சி பெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு ஒரே பள்ளியில் மட்டுமே 100 விழுக்காடு மாணவ - மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2021- 2022ஆம் கல்வி ஆண்டில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 86. 5 விழுக்காடு மாணவர்களும், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 75.8 விழுக்காடு மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 5 கல்வி ஆண்டில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த 2016-17ஆம் ஆண்டில் 93 விழுக்காடு; 2017-18ஆம் ஆண்டில் 93.3 விழுக்காடு; 2018-19ஆம் ஆண்டில் 92.4 விழுக்காடு; 2019-20ஆம் ஆண்டில் 100 விழுக்காடு; 2020-21ஆம் ஆண்டில் 100 விழுக்காடு; 2021-22ஆம் ஆண்டில் 86. 5 விழுக்காடாக இருந்தது.
அதேபோல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த 2016-17ஆம் ஆண்டு 88.7 விழுக்காடு; 2017-18ஆம் ஆண்டில் 88. 7 விழுக்காடு; 2018-19ஆம் ஆண்டில் 90. 4 விழுக்காடு; 2019-20ஆம் ஆண்டில் 85. 8 விழுக்காடு; 2020-21ஆம் ஆண்டில் 100 விழுக்காடு; 2021-22ஆம் ஆண்டில் 75. 8 விழுக்காடு என இருந்தது.
அரசு பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சி மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் பெரிய அளவில் குறைந்துள்ள நிலையில், மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களோடு சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஓமைக்கிரான் பரவல் அதிகரிப்பு - சுகாதாரத் துறை