கூகுள் நிறுவனத்தின் புதிய சேவையான ’பீப்பிள் கார்ட்ஸ்’ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையைப் பெற முதலில் பயனர்கள் சைன் இன் செய்து தங்களின் பெயர்களை சர்ச் பாக்ஸில் உள்ளிட வேண்டும். அடுத்ததாக தங்களது விவரங்களை கூகுள் அக்கவுண்ட்டிலிருந்து உருவாக்கிக் கொள்ளக் கோரும் தகவல் திரையில் தோன்றும். அதில் தங்களது விவரங்கள், வலைதளங்கள், சமூக வலைதள ப்ரொஃபைல்களை லின்க் செய்து கொள்ள முடியும். மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம். ஒரு பயனரால் ஒரு கார்ட் மட்டுமே உருவாக்கிக் கொள்ள முடியும். கார்டின் மொத்தக் கட்டுப்பாடும் பயனர்களிடம் தான் இருக்கும். எதிர்காலத்தில் தேவைப்பட்டால் கார்டில் திருத்தமோ அல்லது அழிக்கவும் செய்யலாம்.
இது குறித்து கூகுள் சர்ச் தயாரிப்பு மேலாளர் லாரன் கிளார்க் கூறுகையில், "இந்தப் புதிய அம்சம் மில்லியன் கணக்கான தனிநபர்கள், தொழில் முனைவோர், ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்கள், பகுதி நேரப் பணியாளர்கள் உட்பட் அனைவருக்கும் உதவும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று முதல் இந்தியா முழுவதும் உள்ள பயனர்கள், அவர்களின் விர்ச்சுவல் விசிட்டிங் கார்டை செல்போனில் கண்டறிய முடியும்.
பயனர்கள் ஒருவரது பெயரைக் கொண்டு தேடும்போது, இந்தக் கார்ட் அவர்களின் முழு விபரங்களுடன் திரையில் தோன்றும். ஒரே பெயரில் பல கார்டுகள் இருந்தாலும், தேடுதல் மிகவும் துல்லியமாக நடைபெற பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பயனர்கள் விவரத்தை பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய விர்ச்சுவல் விசிட்டிங் கார்டை செல்போனில் மட்டுமே காண்பிக்க முடியும்" எனத் தெரிவித்தார்.