மும்பை: இந்திய பங்குச்சந்தை முகைமைகள் இன்றைய வர்த்தக நாள் தொடக்கத்திலேயே புதிய உச்சத்துடன் தொடங்கின.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வரலாறு படைத்துள்ளது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியும் 17,900 புள்ளிகளைக் கடந்து இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட எழுச்சி காரணமாக டாடா மோட்டார்ஸ், ஓ.என்.ஜி.சி., இன்ஃபோசிஸ், விப்ரோ, எல்&டி நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு உயர்ந்துள்ளது. குறிப்பாக ஐ.டி. துறையின் பங்குகள் மட்டும் இன்று 1% விழுக்காடு அளவுக்கு உயர்வடைந்துள்ளன.
சென்செக்ஸ் வளர்ச்சி
1990ஆம் ஆண்டு தொடங்கி, இன்றுவரையிலான சுமார் 31 ஆண்டுகளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 60 மடங்கு வளர்ச்சியை கண்டுள்ளது. 1990ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி 1000 புள்ளிகளை முதல் முறையாக சென்செக்ஸ் தொட்டது.
பின்னர், 1992ஆம் ஆண்டு ஹர்ஷத் மேத்தா மோசடி, 1993ஆம் ஆண்டு மும்பை பங்குச்சந்தை கட்டடத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம், 1999ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போர், 2001ஆம் ஆண்டில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதல் மற்றும் இந்திய நாடாளுமன்ற தாக்குதல் போன்ற பல்வேறு நெருக்கடியான நிலையை இந்திய பொருளாதாரம் சந்தித்ததால், 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளை தொட்டது.
ஆமை காட்டெருமை ஆன கதை
அதன் பிறகு, அதிகரிக்க தொடங்கிய சென்செக்ஸ், 2007ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி 20 ஆயிரம் புள்ளிகளை எட்டியது. அதனைத் தொடர்ந்து, 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி, 2009ஆம் ஆண்டில் வெளியான சத்தியம் நிறுவனம் மோசடி போன்ற காரணங்களால் சரிந்த சென்செக்ஸ், 8 ஆண்டுகள் கழித்து 2015ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தான் 30 ஆயிரம் புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை அடைந்தது.
அண்மையில் நடைபெற்ற பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி, பண மதிப்பு இழப்பு நடவடிக்கையின் தாக்கம் மற்றும் கரோனாவால் ஏற்பட்ட சரிவு என்று எண்ணற்ற பிரச்சினைகளை கடந்து வந்திருந்தாலும், 2019ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி, 40 ஆயிரம் புள்ளிகளையும், அடுத்த ஒன்றரை வருடத்தில், அதாவது 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 50 ஆயிரம் என்ற உச்சத்தினையும் சென்செக்ஸ் அடைந்தது.
இந்நிலையில், 8 மாத இடைவெளியில், அதாவது இன்று 60 ஆயிரம் என்ற உச்சத்தையும் சென்செக்ஸ் பதிவு செய்துள்ளது. 1000 புள்ளிகளில் இருந்து 60 ஆயிரம் புள்ளிகளை எட்டிய இந்த 31 ஆண்டு காலத்தில் பல இடர்பாடுகளை சந்தித்து, இந்திய பங்கு சந்தை முகமை முன்னேறியுள்ளது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: கண்டுபிடிப்பாளர்களுக்கு நற்செய்தி: கல்வி நிறுவனங்களுக்கு 80% காப்புரிமை கட்டணத்தில் விலக்கு