வங்கி, ஐடி துறை பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், இந்திய பங்குச்சந்தை மூன்றாவது நாளாக இன்றும் ஏறுமுகத்தில் வர்த்தகத்தை நிறைவுசெய்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 605.64(1.89 விழுக்காடு) அதிகரித்து 32,720.16 புள்ளிகளிலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 172.45(1.84 விழுக்காடு) அதிகரித்து 9,553.35 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவுசெய்துள்ளன.
ஏற்றம் - இறக்கம் கண்ட பங்குகள்!
ஹெச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் பங்குகள் ஏழு விழுக்காடு வரை அதிகரித்தது. அதைத்தொடர்ந்து ஹெச்.சி.எல் டெக், எம் & எம், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, பஜாஜ் பைனான்ஸ், இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன. அதேநேரம் ஆக்சிஸ் வங்கி, ஆசிய பெயிண்ட்ஸ், எச்.யூ.எல், டைட்டன், இண்டஸ்இண்ட் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.
காரணம் என்ன?
ஆசிய நாடுகள் பொருளாதாரத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளதும் கோவிட்-19 பரவலைக் கருத்தில் கொண்டு அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க முடிவு செய்திருப்பதும் பங்குச் சந்தை ஏற்றம் காண முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இது தவிர இந்தியாவில் பொருளாதாரத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு எடுத்துவர மிகப் பெரிய பொருளாதார மீட்டெடுப்பு திட்டத்தை அரசு அறிவிக்கும் என்று முதலீட்டாளர்கள் பெரிதும் நம்புவதாலும் பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளதாக வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச பங்குச் சந்தை
ஷாங்காய், ஹாங்காங், சியோல் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் தங்கள் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ஐரோப்பியப் பங்குச் சந்தையும் ஏற்றம் கண்டு வர்த்தகமாகிவருகிறது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 2.99 விழுக்காடு அதிகரித்து பேரல் ஒன்று 23.41 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகிவருகிறது.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 52 பைசாக்கள் அதிகரித்து 75.66 ரூபாய்க்கு வர்த்தகமானது.
இதையும் படிங்க: 2 மாதங்களுக்குச் சம்பளம் இல்லை - ஸ்பைஸ்ஜெட் அறிவிப்பால் அதிர்ச்சி!