மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்றைவிட 600 புள்ளிகள் அதிகமாக இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. தற்போது சென்செக்ஸ் 522 புள்ளிகள் உயர்ந்து 31,965 புள்ளிகளிலும் தேசிய
பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 145 புள்ளிகள் உயர்ந்து 9,344 புள்ளிகளிலும் வர்த்தகமாகிவருகிறது.
ஏற்றம் இறக்கம் கண்ட பங்குகள்
இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் அதிகபட்சமாக நான்கு விழுக்காட்டிற்கும் மேல் ஏற்றம் கண்டது. அதைத்தொடர்ந்து கோட்டாக் வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்தன.
ரிலையன்ஸின் ஜியோவில் அமெரிக்காவின் விஸ்டா 11,367 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் இரண்டு விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்தது.
மறுபுறம் பவர்ஜர்ட், ஹெச்.சி.எல் டெக், ஏசியன் பெயின்ட்ஸ் என்.டி.பி.சி. ஆகியவற்றின் பங்குகள் இறக்கம் கண்டன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வியாழக்கிழமை வர்த்தகத்தின்போது சுமார் 19,056.49 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
காரணம் என்ன?
வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் அதிகரித்துவருவதும் வெளிநாடுகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுவருவதும் இந்திய பங்குச் சந்தை உயரக் காரணமாகக் கருதப்படுகிறது.
வெளிநாட்டு பங்குச் சந்தை
ஷாங்காய், டோக்கியோ, சியோல் என சர்வதேச அளவில் உள்ள அனைத்து முக்கிய பங்குச் சந்தையும் ஏற்றத்தில் வர்த்தகமானது. அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தையின் நள்ளிரவு வர்த்தகம் ஒரு விழுக்காட்டிற்கும் மேல் ஏற்றம் கண்டது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை 1.29 விழுக்காடு அதிகரித்து பேரல் ஒன்று 29.84 அமெரிக்க டாலருக்கு வர்த்தகமாகிவருகிறது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் ஒரே மாதத்தில் 2 கோடி பேர் வேலையிழப்பு!