2021-22ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை இன்று (பிப். 01) தாக்கல்செய்யப்படுகிறது. நிதிநிலை அறிக்கைக்கு முன் நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது. இந்த ஆய்வறிக்கையைத் தயார்செய்த நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே. சுப்ரமணியன், நிதிநிலை அறிக்கை எதிர்பார்ப்புகள் குறித்து ஈடிவி பாரத்திடம் பிரத்யேகமாகத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
பொருளாதார வளர்ச்சி
கோவிட்-19 பொதுமுடக்கம் காரணமாக நாட்டின் ஜிடிபி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) முதல் காலாண்டில் 23 விழுக்காடு வீழ்ச்சியைக் கண்டது. இந்த வரலாறு காணாத சரிவு குறித்து கே. சுப்ரமணியன் பேசுகையில், "லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற பொதுமுடக்கம் இன்றியமையாதது. அதேவேளை முதல் காலாண்டில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சிக்குப் பின்னர், இரண்டாவது காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி சிறப்பான மீட்சியைக் கண்டது.
இதன் தொடர்ச்சியாக மூன்றாவது காலாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி பாசிடிவ் (நேர்மறை) இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நிதியாண்டில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 11 விழுக்காடு வளர்ச்சியடையும். 2023ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கோவிட்-19க்கு முந்தைய காலகட்டத்திற்கு வரும் எனக் கணிக்கிறேன்" எனக் கூறினார்.
தொழிலாளர் சீர்திருத்தம்
நாட்டின் உற்பத்தித் துறை கடும் பாதிப்பைச் சந்தித்துவருகிறது. இது குறித்து சுப்ரமணியன் பேசுகையில், மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்றார். இதன் தாக்கம் நகரம், கிராமப்புறங்களில் தென்படுவதாக குறிப்பிட்டார்.
வெறும் ஏற்றுமதி சார்ந்த திட்டங்களை மட்டும் கருத்தில்கொள்ளாமல் உற்பத்தி சார் வளர்ச்சியை மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகச் சொன்ன சுப்ரமணியன், 2012ஆம் ஆண்டை ஒப்பிடும்போது உணவு, உடை, கட்டுமானம் உள்ளிட்ட துறைகள் தற்போது மேம்பட்ட நிலையில் உள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
புதிய வேளாண் சட்டங்கள்
நாட்டின் முக்கியப் பேசுபொருளாக உள்ள புதிய வேளாண் சட்டங்கள் குறித்து பேசுகையில், "அரசுக்கும் விவசாயிகளுக்கும் (உழவர்கள்) ஏற்பட்டுள்ள பூசல் விரைவில் சீராகும் என எதிர்பார்க்கிறேன். பொருளாதாரப் பார்வையில் புதிய வேளாண் சட்டங்கள் சிறப்பான முன்னெடுப்பாகும். புதிய சட்டங்கள் சிறு உழவர்களுக்கு நல்ல பயனைத் தரும். தங்கள் உற்பத்திப் பொருளை எங்கு வேண்டுமானாலும் விற்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த புரிதல் உழவர்களுக்கு ஏற்பட்டு விரைவில் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: 'வேளாண்மை சார்ந்த பொருளாதாரத்தை பட்ஜெட் பிரதிபலிக்க வேண்டும்' - முனைவர் முத்துராஜா