அரசின் பொதுத்துறை தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த 7-8 மாதங்களாக ஊழியர்களுக்கு, சம்பளத்தை சரியான நேரத்துக்கு வழங்க முடியாமல் 15ஆம் தேதி வரை இழுத்தடிக்கும் நிலையில் உள்ளது.
இந்த நிதிநெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஊழியர்களுக்கான 'விருப்ப ஓய்வுத் திட்டம்' ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, 50 வயதைக்கடந்து நீண்ட காலம் பணியில் இருக்கும் ஊழியர்கள் தாமாக முன்வந்து விருப்ப ஓய்வெடுக்கும் பட்சத்தில் சிறப்பான சலுகைகளுடன் கூடிய பணிக்கொடை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டது.
இந்த திட்டத்துக்குத் தகுதியாக உள்ள சுமார் ஒன்றரை லட்சம் ஊழியர்களில் தற்போதுவரை, சுமார் 92 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் ஜனவரி 31 வரை இந்த திட்டத்திற்கான காலக்கெடு இருப்பதால் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கையானது ஒரு லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த திட்டத்திற்கு எதிராக ஊழியர் சங்கம் சார்பில் நேற்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது.
2019ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் நஷ்டத்தில் முடங்கியுள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அன்மையில் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட ஐந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்!