இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸின் தலைமை செயல் அலுவலராகப் பணியாற்றிய விஷால் சிக்கா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சியானது தற்போது உலகளவில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கிவரும் நிலையில், இந்த மாற்றத்திற்கு இந்தியர்கள் தயாராக வேண்டும் என்ற கனவுடன் விஷால் சிக்கா இந்நிறுவனத்தைத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையின்படி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து நிதி ஆயோக் அமைப்பு, மத்திய அமைச்சர்களுக்கு விளக்கக் கருத்தரங்கு ஒன்றை விஷால் சிக்கா அண்மையில் நடத்தினார்.
இந்நிலையில், வியாநய் சிஸ்டம்ஸ் என்ற தனது புது நிறுவனத் தொடக்க விழாவில் பேசிய விஷால் சிக்கா, "அடுத்த 20 ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் விஸ்வரூப வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் தானியங்கி தொழில்நுட்பம் வளர்ச்சிபெற்று, வேலையின்மை சிக்கல் உருவாக வாய்ப்புள்ளது. அதேவேளை, இந்திய இளைஞர்களும் மாணவர்களும் இந்தச் சூழலைப் புரிந்துகொண்டு இப்போதே தயாராகும்பட்சத்தில் உலக அரங்கில் இந்தியர்கள் முன்னோடிகளாகத் திகழ்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
சுமார் ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான புது நிறுவனத்தை பொதுநிதி திரட்டல் திட்டத்தின் மூலம் விஷால் சிக்கா தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.