இந்தியாவில் மாற்று எரிசக்தி, மின்சார வாகன பயன்பாட்டுத் திட்டம் குறித்த ஆய்வறிக்கையை நிதி ஆயோக் நிறுவனம், ராக்கி மவுன்டெயின் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளது. அதில், பேம் 2 திட்டம் மற்றும் அரசின் திட்டங்கள் சரியான பாதையில் சென்றால் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின்சார வாகன போக்குவரத்தில் பெரியளவிலான மாற்றம் ஏற்படும். அதன்படி, வரும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 80 சதவிகித இரு சக்கரவாகனங்கள், 30 சதவிகித தனியார் கார்கள், 40 சதவிகித பேருந்துகள் மின்சாரம் மற்றும் பேட்டரிகளைப் பயன்படுத்தி இயங்கும் தன்மை கொண்டவையாக மாற்றப்படும்.
இந்த திட்டத்தால் ஆண்டுக்கு இந்தியா இறக்குமதி செய்யும் சுமார் 50 லட்சம் டன் எண்ணெய் மிச்சப்படுத்தலாம். இதன் மூலம் 17.2 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு சேமிப்பாகக் கிடைக்கும். அத்துடன் ஆண்டொன்றிற்கு 84 கோடி டன் அளவிற்கான கார்பன்டை யாக்சைடு வாயு மாசு குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் மின்சார வாகன உற்பத்திக்கு சரியான அளவில் நிதி ஒதுக்கீடு செய்து, படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் பயனாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என அறிக்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.