இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் என்பது நமது அன்றாட வாழ்கையோடு வாழ்க்கையாகக் கலந்துவிட்டது. ஷாப்பிங், பணப் பரிமாற்றம், பொழுதுபோக்கு என பெரும்பாலானவற்றுக்கு நாம் தொழில்நுட்பத்தையே பயன்படுத்துகிறோம். இந்தச் சூழலில் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நமது தகவல்களைத் திருடுவது என்பது வழக்கமான ஒன்றாக மாறிவருகிறது.
பிரதமரின் கோவிட்-19 நிவாரண நிதியின் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு சுமார் 20 லட்சம் இந்தியர்களைக் குறிவைத்து பிஷிங் மோசடி நடைபெற்றுள்ளதாக இந்தியாவின் கணினி அவசரநிலை குழு ஜூன் 19ஆம் தேதி எச்சரிக்கை விடுத்திருந்தது. கல்வான் மோதலுக்குப் பின் இந்தியா மீதான சீனாவின் சைபர் தாக்குதல் என்பது 200 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக சைபர் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனமான சைஃபிர்மா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, இதுபோன்ற நெருக்கடியான காலகட்டத்தில் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் சைபர் தாக்குதல்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள காப்பீடு என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.
தனிநபர் சைபர் காப்பீடு என்றால் என்ன?
இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவர்கள், கிளவுட் ஸ்டோரேஜ் சேவையைப் பயன்படுத்துபவர்கள், ஸ்மார்ட்ஹோம் சேவையை உபயோகிப்பவர்கள் சைபர் காப்பீட்டை எடுப்பது குறித்து நிச்சயம் பரிசீலனை செய்ய வேண்டும்.
சைபர் காப்பீட்டை வழக்கும் நிறுவனங்கள்
இந்தியாவில் ஹெச்.டி.எஃப்.சி.-ஈ.ஆர்.ஜி.ஓ., பஜாஜ் அலையன்ஸ் பொது காப்பீடு, ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் பொது காப்பீடு ஆகிய மூன்று நிறுவனங்கள் சைபர் காப்பீடு திட்டங்களை வழங்குகின்றன.
எவற்றுக்கெல்லாம் காப்பீடு வழங்கப்படும்?
பொதுவாக அடையாளத் திருட்டு, சைபர் கொடுமைப்படுத்துதல், இணையத்தில் மிரட்டிப் பணம் பறித்தல், கணினி வைரஸ் ஊடுருவல், வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு, மொபைல் வாலெட் மோசடி ஆகியவற்றிற்கு காப்பீடு வழங்கப்படும். இதுபோன்ற மோசடிகளால் ஏற்படும் சட்ட ரீதியான செலவுகள் அனைத்தும் இந்தப் பாலிசிகளில் கவர் ஆகும். மேலும், நம்மைப் பற்றி இணையத்தில் பரவியிருக்கும் தவறான தகவலை நீக்க ஆகும் செலவுகளும் சில பாலிசிகளில் கவர் ஆகும்.
எவற்றுக்கெல்லாம் காப்பீடு வழங்கப்படாது?
இந்த பாலிசிகளில் முறையற்ற இணையப் பயன்பாடு, உடல் காயம் அல்லது சொத்து பாதிப்பு, அங்கீகரிக்கப்படாத தரவு சேகரிப்பு, ஆபாச சேவைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் இழப்பு ஆகியவை கவர் ஆகாது. அரசின் உத்தரவு காரணமாக ஏற்படும் இழப்புகளும் பாலிசிகளில் கவர் ஆகாது.
சைபர் காப்பீட்டுக்கு ஆகும் செலவுகள்
தனிநபர் சைபர் காப்பீட்டின் பிரீமியம் என்பது ஒரு லட்ச ரூபாய்க்கு சுமார் 600 ரூபாய் என்ற விகிதத்தில் தொடங்குகின்றன:
- ரூ.50,000 முதல் ரூ.1 கோடி வரை கவர் ஆகும் ஹெச்.டி.எஃப்.சி-ஈ.ஆர்.ஜி.ஓ. நிறுவனத்தின் இ-செக்யூர் காப்பீட்டு பாலிசியின் ஆண்டு பிரீமியம் கட்டணம் ரூ.1,500 முதல் தொடங்குகிறது.
- ஒரு லட்சம் ரூபாய் முதல் ரூ.1 கோடி வரை கவர் ஆகும் பஜாஜ் அலையன்ஸ் காப்பீடு நிறுவனத்தின் சைபர் சேஃப் காப்பீட்டு பாலிசியின் ஆண்டு பிரீமியம் கட்டணம் ரூ.700 முதல் தொடங்குகிறது.
- அதேபோல ரூ.50,000 முதல் ரூ.1 கோடி வரை கவர் ஆகும் ஐ.சி.ஐ.சி.ஐ. லோம்பார்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ரீடெயில் சைபர் காப்பீட்டு பாலிசியின் பிரீமியம் தினசரி 6.5 ரூபாயிலிருந்து 65 ரூபாய் வரை உள்ளது.
சைபர் காப்பீட்டு பாலிசிகள் எடுப்பதற்கு முன் சிந்திக்க வேண்டியவை
தனிநபர்கள் தங்கள் தேவை மற்றும் கவரேஜூக்கு ஏற்ப பாலிசிகளை எடுக்க வேண்டும். மேலும், எவையெல்லாம் கவர் ஆகும், எவையெல்லாம் கவர் ஆகாது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். வயது வரம்பு மற்றும் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் கவர் ஆவார்களா என்பதையும் சரிபார்க்கவும்.
சைபர் காப்பீடு பெறுவது எப்படி?
காப்பீட்டு நிறுவனங்களில் அதிகாரப்பூர்வ வலைதளங்கள் இந்த பாலிசிக்களை ஆன்லைனிலேயே வாங்கலாம். தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தால், பாலிசி குறித்த தகவல்கள் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். மேலும், அலுவலங்களுக்கு நேரில் சென்றும் பாலிசிக்களைப் பெறலாம்.
இதையும் படிங்க: குற்றம் 04 - பெருநிறுவனங்களின் ஊழியர்களை குறிவைக்கும் இ-மெயில் ஃபார்வேர்டர்