ஹைதராபாத்: வீட்டை கட்டுவது அல்லது வீட்டை வாங்குவது என்பது அனைவரின் கனவாக இருந்து வருகிறது. மனிதனின் இன்றியமையாததும், தவிர்க்க முடியாதததும் என இந்த கனவு மாறியிருக்கிறது.
பெருநகர வளர்ச்சி, ஊதிய உயர்வில் மீதுள்ள அழுத்தம் காரணமாக அனைவராலும் சேமிப்பின் மூலம் வீடுகளை கட்டவோ, வாங்கவோ முடிவதில்லை. இந்த நேரத்தில் தான் வங்கிகள் வரிசைப் போட்டுக் கொண்டு வீடுகளை வாங்க கடன் உதவி அளிக்கிறது.
எங்களிடம் தான் குறைந்த வட்டி என்று போட்டிப் போட்டுக் கொண்டு வங்கிகள் வீடு மீது ஆர்வம் காட்டுபவர்களைச் சுற்றி வலம் வருகிறது. ஆனால், சிலருக்கு மட்டுமே வீட்டுக் கடன் திட்டம் லாவகமாக அமைகிறது.
இதற்கான காரணம், ஊதியத்திற்கு அதிகமான வரம்பில் கடன்களை தேர்வு செய்வது. எனவே, எப்போதும் உங்கள் வருமானத்தில் 40 விழுக்காடு தொகையை மையப்படுத்தி மட்டுமே கடன்பெற தீர்மானியுங்கள். காரணம், மீதமுள்ள தொகையைக் கொண்டு வீட்டுக்கு தேவையான பொருள்கள், மருத்துவைத் தேவைகள், சேமிப்பு ஆகியவற்றை உங்களால் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
இப்படி செய்யாமல் போனால், கடன் பெற்ற பின், தேவைகளுக்காக மீண்டும் கடன் பெறும் சூழலுக்குத் தள்ளப்படுவீர்கள். இதனை சரிசெய்ய சில எளிய வழிகளை உங்களுக்காக தொகுத்துள்ளோம்.
வீட்டு கடன் தவணை சரியாக கையாளும் முறை
கூடுதலாக ஒரு தவணை:
பொதுவாக வீட்டு கடன் பெற்றவர்கள், ஆண்டுக்கு 12 முறை தங்களுக்கு வகுக்கப்பட்ட தொகையை வங்கிகளில் செலுத்துவார்கள். அதில், வட்டியும், அசலும் அடங்கும். அப்படி செலுத்தினால், கடன் ஆண்டு முடிவில், நீங்கள் வாங்கிய கடன் தொகையில் ஒரு பங்கு கூடுதலாக வங்கிக்கு செலுத்தியிருப்பீர்கள்.
ஆனால், 12 மாதங்களுக்கு பதிலாக 13 மாதங்கள், அதாவது ஒரு மாதம் முன்கூட்டியே தவணையை செலுத்தும்பட்சத்தில், தவணை காலம் குறையும். இதன் மூலம் செலுத்தும் தொகையின் அளவு வெகுவாகக் குறையும். இடத்தின் விலை அதிகரிக்கும் வேளையில், உங்கள் முதலீட்டின் மதிப்பும் அதிகளவு வளர்ச்சியை அடையும்.
தேவையை அறிந்து தேர்வு செய்வது:
மாதத் தவணைக்கு இவ்வளவு தான் வரம்பு என்று தீர்மானித்துவிட்டால், அதற்கேற்றவாறு காலத்தை தேர்வு செய்வது நல்லது. அதிகளவு காலம் என்பது குறைந்த மாதத் தவணையை செலுத்தும் வகையில் இருக்கும். இது குறைந்த ஊதியம் பெறும் பயனாளர்களுக்கு வசதியாக இருக்கும்.
அறிவிப்புகளை அறிந்து செயல்படுவது
நிலையற்ற வட்டி, நிலையான வட்டி - இவற்றை குறித்து தீர்கமாக முடிவெடுத்துக் கொள்ளுங்கள். நிலையற்ற வட்டியில் இருக்கும் சாதக பாதகங்களை அறிந்து கொள்ளுங்கள். அதாவது, ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் பட்சத்தில் நிலையற்ற வட்டியுடன் கடன்பெற்றவர்களுக்கு, தவணைத் தொகை குறையும்.
அதுவே, தலைமை வங்கி அறிவிக்கும் வட்டி உயர்வு நிலையான வட்டியுடன் கடன் பெற்றவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது. எனவே, தேவையை அறிந்து தெரிவு செய்து கொள்ளுங்கள்.
மேலும், முறையாக தவணைத் தொகை செலுத்துபவர்களுக்கு, தாங்கள் செலுத்தும் வட்டியிலிருந்து அரசு அவ்வப்போது சலுகைகள் அளிக்கும். அதனையும் தவறாது தெரிந்து வைத்துக் கொண்டு, வங்கி மேலாளரை தொடர்பு கொள்ளுங்கள்.
மொத்தத்தில், கடன் பெறும் எண்ணம் உள்ளவர்கள், தங்கள் வருமானத்தில் இருந்து 40 விழுக்காடு தொகையை மட்டுமே கணக்கில் வைத்துக் கொண்டு தவணை காலத்தையும், தொகையையும் தெரிவு செய்யவேண்டும். இதுவே, உங்கள் வாழ்வின் மேன்மைக்கு வழிவகுக்கும்.
இதையும் படிங்க: மிதக்கும் வீட்டை பார்த்திருக்கிறீர்களா - மழை,வெள்ளம் வந்தா கூட ஒண்ணும் பண்ண முடியாது!