மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று (ஜன6) தொடங்கிய பங்குச்சந்தையில் 30 பங்குகளை கொண்ட மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 787.98 புள்ளிகள் சரிந்து 40,676.63 என வர்த்தகம் ஆனது.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 233.60 புள்ளிகள் சரிந்து 11,993.05 எனவும் கடும் சரிவுடன் வர்த்தகமானது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் இந்திய பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலின் தாக்கம் உலக நாடுகளின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க படைகளை வெளியேற்ற தீர்மானம் இயற்றிய ஈராக் மீது மிக கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 டாலராக அதிகரித்துள்ளது.
இதனால் உலோகம், நிதி, ரியல் எஸ்டேட், வங்கித்துறை நிறுவனங்களின் பங்குகள் விலை அதிக அளவில் சரிந்துள்ளது.
டைட்டன் மற்றும் பவர் கிரீட் நிர்வாக பங்குகளை தவிர ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் அனைத்தும் கடும் சரிவை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க: சைரஸ் மிஸ்திரியை டாடா சன்ஸ் செயல் தலைவராக நியமித்ததில் மாற்றமில்லை