இன்றைய டிஜிட்டல் உலகம் பலவிதமான மாறுதல்களுக்கு தொடர்ச்சியாக உட்பட்டுவருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களின் வருகைக்குப்பின் அவற்றின் பயன்பாட்டுமுறை மற்றும் செயல்திறனானது தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், ஸ்மார்ட்போன்களின் எதிர்கால வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனமான கவுன்ட்டர்பாயின்ட் ரிசர்ச் என்ற ஆராய்ச்சி நிறுவனம் தற்போது புது தகவல்களை வெளியிட்டுள்ளன.
அதன்படி வரும் 2021ஆம் ஆண்டுக்குள் 50 விழுக்காடு ஸ்மார்ட்போன்கள் இரண்டுக்கும் மேற்பட்ட கேமராக்களை கொண்டிருக்கும் என்ற முக்கியத் தகவலைத் தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் தெரிவித்திருப்பதாவது, தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட்போன்களின் சந்தையில் கேமராவின் முக்கியத்துவம் பெருமளவில் அதிகரித்துள்ளது. அனைத்து ஸ்மார்ட்போன்களும் போட்டிப் போட்டுக்கொண்டு கேமரா வடிவமைப்பில் பல்வேறு வகையான மாறுதல்களை மேற்கொள்கின்றன.
பின்பக்க கேமரா மட்டுமே இருந்த நிலை சில ஆண்டுகளுக்கு முன் மாறி, முன்பக்க கேமரா வந்தபின் செல்ஃபி புகைப்படம் எடுக்கும் ட்ரெண்ட் உருவானது. தற்போது அதற்கு அடுத்தபடியாக மூன்று கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களின் வருகை வரத்தொடங்கியுள்ளன. பின்பக்கத்தில் உயர்தர ரெசல்யூசனுடன் கூடுதல் சென்சாருடன் கூடிய மூன்று கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்களை பல நிறுவனங்கள் தயாரித்து சந்தையில் விற்க தொடங்கியுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் புதிதாக வந்த 40 ரக ஸ்மார்ட்போன்கள் மூன்று கேமராக்கள் கொண்டதாக உள்ளன. 2020ஆம் ஆண்டு இந்த ரக ஸ்மார்டபோன்களின் பயன்பாடு 35 விழுக்காடாகவும், 2021ஆம் ஆண்டு பயன்பாட்டில் உள்ள பாதி ஸ்மார்ட் போன்கள் இரண்டுக்கும் மேற்பட்ட கேமராக்களை கொண்டதாக இருக்குமென ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.