உலக பெண்கள் தினம் இன்று(மார்ச் 8) கொண்டாடப்படும் நிலையில், கூகுள் ஃபார் (for) இந்தியா என்ற பெயரில் மெய்நிகர் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய கூகுள் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை, "இந்தியாவின் 10 லட்சம் கிராமப் பெண்களை தொழில்முனைவோராக உருவெடுக்க கூகுள் நிறுவனம் புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. அவர்களுக்கு வணிகம் தொடர்பான வகுப்புகள் நடத்த முடிவெடுத்துள்ளோம்.
கோவிட்-19 பாதிப்பு தாக்கம் காரணமாக நாட்டின் இரண்டு கோடி பெண் குழந்தைகள் கல்வியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சமத்துவமான, ஒருங்கிணைந்த வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டியது கடமை. எனவே, கிராமப்புறப் பெண்கள் மேம்பாட்டிற்காக 182 கோடி ரூபாய் நிதி வழங்கவுள்ளேன் " என்றார்.
இந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா, "தொழில்நுட்பம் பெண்களின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றும்" என்று நம்பிக்கை தெரிவித்தார். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, "சமூக-பொருளாதார அலகுகளில் இந்தியப் பெண்கள் மேம்பாடு சமூகத்தில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்" என்றார்.
இதையும் படிங்க: இன்ஃபோசிஸ், அசஞ்சர் ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசம்!