கடந்தாண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழையால் வெங்காய உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக யாரும் எதிர்பாராத அளவிற்கு வெங்காயம் விலை அதிகரித்து, ஒரு கிலோ வெங்காயம் 150 ரூபாய் வரை விற்பனை ஆனது.
இந்திய சமையல் அறையில் அதிகம் பயன்படுத்தும் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு அதிகரித்ததால், அதன் ஏற்றுமதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு தடைவிதித்தது. மேலும் நிலைமையை சரிசெய்ய எகிப்து நாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்தது மத்திய அரசு.
வெங்காயத்தால் ஆட்சி கவிழ்ந்த நிகழ்வெல்லாம் அரங்கேறியுள்ளது என்பதை உணர்ந்த மத்திய அரசு, முடிந்தவரையில் போராடி உயர்ந்த வெங்காய விலையை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவந்தது.
இந்நிலையில் விலை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால், வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வருகின்ற 15ஆம் தேதி முதல் வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மினரல் வாட்டர் நிறுவனங்களுக்கு சீல் - அரசின் சமூக நல குடிநீர் நிலையங்களுக்கு வரவேற்பு