கோவிட்-19 தொற்று காரணமாகக் கிட்டத்தட்ட அனைத்து விமான சேவைகளும் முற்றிலும் முடங்கியுள்ளதால் சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாகச் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "செப்டம்பர் மாத இறுதியில் சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கை 1.2 பில்லியனாகக் குறையும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்.
பிப்ரவரி மாதம் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 13 விழுக்காடு வரை குறைந்துள்ளது. சீனாவில் விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளே இதற்கு முக்கிய காரணம். மார்ச் மாதம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகள் மட்டுமின்றி உலகெங்கும் சுமார் 49 விழுக்காடு வரை சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஏப்ரல் மாதம் நிலைமை மேலும் மோசமாகி சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை 92 விழுக்காடு வரை குறைந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை விமானப் போக்குவரத்தில் ஜனவரி மாதம் வரை எவ்வித சரிவும் நிகழவில்லை. பிப்ரவரி மாதம் இரண்டு விழுக்காடு வரை சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு கோவிட்-19ஐ பெருந்தொற்றாக அறிவித்ததைத் தொடர்ந்து மார்ச் மாதம் 29 விழுக்காடு வரை சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. ஏப்ரல் மாதம் நிலைமை மேலும் மோசமடைந்தது. அப்போது இந்தியாவில் சர்வதேச பயணிகளின் எண்ணிக்கை யாரும் எதிர்பார்க்காத வகையில் 89 விழுக்காடு வரை குறைந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு கணித்ததைவிட இரண்டில் மூன்று பங்கு விமானச் சேவை குறையும் என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதனால் ஜனவரி - செப்டம்பர் காலத்தில் விமான நிறுவனங்கள் 160 முதல் 253 பில்லியின் டாலர்கள் வரை நஷ்டத்தைச் சந்திக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா, ஆசிய-பசிபிக் ஆகிய நாடுகளில் விமான போக்குவரத்தின் வருவாய் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து வட அமெரிக்காவிலும் அதிக பாதிப்பு இருக்கும் என்றும் அதில் கூறியுள்ளது. இதேபோல், கோடைக் காலத்தில் பயணிகளின் எண்ணிக்கையில் ஐரோப்பாவில் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 தொற்றுக்கு முன் விமான நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை அடைந்து வந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் தீவிரத்தன்மை எப்போது தணியும் என்று தெரியாத நிலையில், இரு வேறு சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு குறுகிய கால பொருளாதார தாக்கங்களைக் களைய ஆறு வெவ்வேறு திட்டங்களைச் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் முன்வைத்துள்ளது.
இதையும் படிங்க: சீனாவில் வெகுவாகக் குறைந்துவரும் வைரஸ் பாதிப்பு