இந்தியாவில் ஐடி துறையில் பணிபுரிவோரின் எண்ணிக்கை உலகிலுள்ள மற்ற நாடுகளைவிடப் பல மடங்கு அதிகம். இதனால் ஐடி துறையில் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது. இந்நிலையில், ஐடி துறையில் இந்தியாவின் வளர்ச்சி என்பது சிறப்பாக உள்ளதாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவிலுள்ள 67 விழுக்காடு மென்பொருள் ஊழியர்கள் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களான இயந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு ஆகியவை தங்கள் செயல்திறனை அதிகரிக்க உதவுவதாகக் கருதுகின்றனர் என்று கார்ட்னர் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும், சர்வதேச அளவில் தொழில்நுட்பத் துறையில் திறனுள்ள நாடாக இந்தியா திகழ்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இரண்டாவது, மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளன.
இந்த ஆய்வு குறித்து கார்ட்னர் நிறுவனத்தின் தலைமை ஆயார்ச்சியாளர் ரஷ்மி சவுத்ரி கூறுகையில், "இந்தியாவிலுள்ள மென்பொருள் ஊழியர்களில் 27 விழுக்காட்டினர் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் திறமையானவர்கள். இந்த ஆய்வில் 10இல் ஏழு பேர் புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் தங்களுக்கு நன்மை ஏற்படும் என்று கூறியுள்ளனர். அதேபோல் தொழில்நுட்ப வல்லுநர்களும் புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளனர்.
சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா மற்றும் சிங்கப்பூரிலுள்ள ஐடி ஊழியர்கள் மற்ற நாடுகளிலுள்ள ஊழியர்களைத் தொடர்புகொள்ள சமூக வலைத்தளங்களை அதிகளவு பயன்படுத்துகின்றனர். இதனால் அவர்களின் டிஜிட்டல் திறன் மேம்படும்.
மேலும், இந்தியாவில் மென்பொருள் ஊழியர்களில் 45 விழுக்காட்டினர் தாங்கள் கண்காணிக்கப்படுவது குறித்துத் தங்களுக்குக் கவலையில்லை என்று தெரிவித்துள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: 'ரேபிட் சோதனைக் கருவிகள் வைரஸ் தொற்றைக் கண்டறியப் பயன்படாது'