கரோனா தொற்றுக்கு முன்னரே இந்திய ஆட்டோமொபைல் சந்தை ஆட்டம் கண்டுவந்தது. கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஏப்ரல், மே மாதங்களில் கார் விற்பனை வராலாறு காணாத அளவுக்கு பாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஜூன் முதல் இந்தியாவில் கார் விற்பனை கணிசமாக அதிகரித்துவருகிறது. இந்நிலையில், கூடுதல் வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் திட்டமிடப்பட்டிருந்த விரிவாக்கப் பணிகளைக் கைவிட டொயோட்டா நிறுவனம் முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாங்கள் இந்தியாவில் உருவாக்கியுள்ள வேலைகளைப் பாதுகாக்க வேண்டும். இதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.
கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் நாங்கள், ஒரு வலுவான உள்ளூர் சப்ளையர் சூழல் அமைப்பை உருவாக்க அயராது உழைத்தோம். இப்போது வரை உருவாக்கியவற்றின் முழுத்திறனை நாங்கள் பயன்படுத்துகிறோம் என்பதை உறுதிசெய்வதே எங்கள் முதல்படி, இதற்கு நேரம் எடுக்கும்.
கோவிட் -19 தாக்கத்தால் ஏற்கனவே இருந்த மந்தநிலை அதிகரித்துள்ளது, இதனால் ஆட்டோமொபைல் துறை கடுமையாகப் பாதித்துள்ளது. இதிலிருந்து மீள ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு வரி மாற்றம் மூலம் அரசு உதவ வேண்டும்.
தொழில் மற்றும் வேலைவாய்ப்பை ஆதரிக்க அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம். பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளைக் காக்க அரசு மேற்கொண்டுள்ள வலுவான செயல்திறன்மிக்க முயற்சிகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
தற்போது அரசுக்கும் சவாலான வருவாய் நிலைமை இருக்கும்போதும் இந்தச் சிக்கலை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா நிறுவனம் 1999ஆம் ஆண்டு இந்தியாவில் தனது உற்பத்தியைத் தொடங்கியது. இந்தியாவில் டொயோட்டாவின் இரு ஆலைகளில் 6,500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இதையும் படிங்க: இந்திய நிறுவனங்களில் ரூ.7,300 கோடியை முதலீடு செய்துள்ள சீனா!