கோவிட்-19 பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளிலும் அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்ட பிற பொருள்களை ஆன்லைன் ஷாப்பிங் வழியாகவே வாங்குகிறார்கள். இதனால் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் பெரும் லாபமடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் 2020ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான வருவாய் கணக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் எதிர்பார்க்கப்பட்டதைவிட உயர்வைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருவாய் 26 விழுக்காடு உயர்ந்து, 75.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக அமேசான் ஈட்டுகிறது.
இருப்பினும் இந்த நெருக்கடியான காலத்தில் பொருள்களை ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு எடுத்துச் செல்லும் செலவும் கணிசமாக உயர்ந்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 29 விழுக்காடு குறைந்து 2.54 பில்லியின் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3.56 பில்லியின் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ், 2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஆர்டர்களை விரைவாகச் சென்று சேர்க்க, மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்கக் குறைந்தபட்சம் 4 பில்லியன் டாலர்களை அமேசான் செலவிடும் என்று தெரிவித்தார்.
அமேசான் நிறுவனம் தனது வருவாய் கணக்கைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் ஐந்து விழுக்காடுவரை சரிவைச் சந்தித்தது.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்க பொருளாதாரம் பெரும் சரிவு!