நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அரும்பாக்கம் பகுதியில் வீரசோழன் ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்களில் பொதுப்பணித்துறை சார்பில் ஐந்து கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், படுக்கை அணை, வாய்க்கால்களின் கரைகளை பலப்படுத்துதல், தண்ணீர் வெளியேறும் மதகுகள் அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று முடிந்தன.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர், வீரசோழனாற்றில் வந்தது. ஆற்றின் தடுப்பணையிலிருந்து கிளை வாய்கால்களான சேந்தவராயன், குறும்பகுடி வாய்கால்களுக்கு தண்ணீர் திற்நதுவிடப்பட்டது.
குறைந்த அளவே தண்ணீர் திறக்கப்பட்ட போதும், கட்டுமானம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் கரை பாதுகாப்பு பக்கவாட்டு சுவர்கள், தண்ணீரில் சரிந்து விழுந்தன. மேலும் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரும்பாக்கம் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தரமற்ற முறையில் பணிகள் மேற்கொள்ளபட்டுள்ளதாகவும் அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.