சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள கொட்டாயூரைச் சேர்ந்த அருணாசலம் என்பவர், எடப்பாடி கவுண்டம்பட்டி தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 20 அடி உயரத்தில் கம்பி கட்டும் சென்டரிங் பணியில் ஈடுபட்டிருந்தார்.
எதிர்பாராதவிதமாக அப்போது கீழே தவறி விழுந்து தலையில் படுகாயமடைந்த நிலையில், எடப்பாடி அரசு மருத்துவமனையில் அவர் முதலுதவி சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனையடுத்து அவரை அங்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் கிராமத்தையடுத்த கன்னியாம்பட்டியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி அபிராமி கர்ப்பிணியாக இருந்தார். குடும்ப தகராறு காரணமாக அபிராமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறிவிட்டு, அவரது கணவர் சண்முகம் மாயமானார். இது அபிராமி உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அபிராமியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த இரண்டு பேரின் உயிரிழப்பு குறித்தும் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.