தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் அமைந்துள்ளது மாவட்ட சிறைச்சாலை. இங்கு, தேனியைச் சேர்ந்த 100 பேர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 163 பேர் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதுரை சுப்பிரமணியபுரம் காவல் துறையினரால் கொலை முயற்சி வழக்கில் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜூன் 7ஆம் தேதி தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ததில், 25 வயது இளைஞருக்கு நேற்று முன்தினம் (ஜூன் 8) கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, தேனி மாவட்ட சிறையில் குற்றவாளியுடன் தங்கியிருந்த கைதிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும், கரோனா பாதிப்புக்குள்ளான கைதி தங்கியிருந்த அறை முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. சிறை பணியாளர்கள், பிற கைதிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் மே 20ஆம் தேதி அடிதடி வழக்கில் மதுரை திடீர்நகர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் 18 வயது இளைஞருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து சிறைக் கைதிகள், பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை. தற்போது இரண்டாவது முறையாக சிறைக் கைதிக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைவாசிகள், பணியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.