கோயம்புத்தூர் மாவட்டம் ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபெற்றுவரும் சீர்மிகு நகரம் பணிகளை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள அரங்கில் பொதுமக்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது பொதுமக்கள் அப்பகுதியிலுள்ள குறைகளை மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்தனர். குறைகள் அனைத்தும் கூடிய விரைவில் சரிசெய்து தரப்படும் என்றும் கூறினார்.
மேலும், பொதுமக்களிடம் பேசிய அவர், "கோவை நகரம்தான் மற்ற நகரங்களைக் காட்டிலும் தனிமனித வருமானம், வரி வசூலில் ஒருபடி மேலுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "சீர்மிகு நகரம் பணிகள் குறித்து எதிர்ப்புகள், மாற்று கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் மாநகராட்சி அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுவராமல் சமூக வலைதளங்களில் தெரிவிப்பது இங்கு பணிபுரிவோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இந்தச் செயலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், பணிகள் நிறைவடைந்ததும் முன்பு இருந்ததைவிட இப்பகுதி பசுமையாகக் காணப்படும் என்றும் கூறினார். இனி மாதந்தோறும் மாநகராட்சி அலுவலர்கள் மக்களைச் சந்தித்து கருத்து கேட்பர் என்றும் தெரிவித்தார்.