திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகேயுள்ளது மணியங்குறிச்சி செல்லாண்டி அம்மன் கோவில். இதன் பின்புறம் உள்ள மலையடிவாரப் பகுதியில் கட்டு சேவல் சண்டை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற புத்தாநத்தம் காவல்துறையினர், சேவல் சண்டை நடத்தியவர்களை சுற்றிவளைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கோசிக்குறிச்சியைச் சேர்ந்த ஆனந்தன் மகன் முருகேசன் (43), செந்துறையைச் சேர்ந்த துரைச்சாமி மகன் செண்பகராஜ்(37), RS மணியாரம்பட்டியைச் சேர்ந்த வேல் மகன் கண்ணன் (35), வையம்பட்டி காந்திநகரைச் சேர்ந்த பொம்மநாயக்கர் மகன் சின்னச்சாமி (55),மதுரையைச் சேர்ந்த பிரகாஷ் (23),ஆனாங்கரைப்பட்டி பழனிச்சாமி மகன்கள் முருகேசன் (30), தமிழ்ச் செல்வன் (24) உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடமிருந்து சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ரூபாய் 4,310 ரொக்கம், ஐந்து சேவல், பதிமூன்று பந்தயக்கத்தி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த புத்தாநத்தம் காவல்துறையினர், வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்தில் 43 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ள நிலையில், ஏழு பேரை மட்டும் கைது செய்துள்ளது புத்தாநத்தம் காவல்துறை மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.