தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ஜூட் மேத்யூ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "ஊரடங்கு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால், வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்களுக்கு கரோனா நிதியுதவியாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான சாலை வரியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தகுதிச் சான்றைப் புதுப்பிக்க ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும். போக்குவரத்து வாகனங்களுக்கு பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் வரை வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும். சுங்கச்சாவடி கட்டணம், மாநிலங்களுக்கு இடையிலான வரிகளில் இருந்து விலக்களிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் வரிகளைத் தள்ளுபடி செய்து மானிய விலையில் பெட்ரோல், டீசல் வழங்க உத்தரவிட வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் இழப்பீடுகள் கோரி தொடரப்பட்ட வழக்குகள் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இன்று (ஜூலை 13) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், எந்த ஆதாரங்களும் இல்லாமல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ஏற்கனவே, நிவாரண உதவி கோரி தாக்கல் செய்த வழக்குகளில், நிதி சம்பந்தப்பட்ட விஷயம் மாநில அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது எனக் கூறி தள்ளுபடி செய்திருந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தற்போதைய சூழ்நிலை குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.