புதுச்சேரிக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகள் அதிகம் வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.
ஆனால் இம்முறை கரோனா வைரஸ் காரணமாக அறிவித்த பொது முடக்கத்தால் கிட்டத்தட்ட 75 நாள்களுக்கு மேலாக பொதுமக்கள் யாரும் அங்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தளர்வுகள் 1.0 என்ற பெயரில் ஜூன் 30 ஆம் தேதிவரை அதிகமான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது 75 நாள்களுக்கு பிறகு, மூடப்பட்டிருந்த கடற்கரை சாலை இன்று முதல் பொதுமக்கள் நடை பயணத்திற்கு திறந்துவிடப்பட்டது.
இதனையடுத்து கடற்கரை சாலையில் நடைபயிற்சி செல்லும் மக்கள் தகுந்த இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை அணிந்து விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.