ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள சென்னம்பட்டி, கொமராயனூர், மஞ்சக்கரல்மேடு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. குடியிருப்பு அதிகமுள்ள இப்பகுதியில் தனியார் விவசாய நிலத்தில் கல்குவாரியொன்றுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கியுள்ளது.
அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ள இந்தப் புதிய கல்குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்திட வலியுறுத்தி கடந்த எட்டாம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கிய அப்பகுதி மக்கள் கடந்த 17ஆம் தேதி கல்குவாரியில் இரவு நேரத்தில் வெடிவைத்து பாறைகளை உடைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கல்குவாரியைச் சோதனையிட்ட வெள்ளித்திருப்பூர் காவல் துறையினர் கல்குவாரிக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வெடி மருந்துகள், அவற்றை வெடிக்கப் பயன்படுத்தும் டெட்டனேட்டர் குச்சிகளைப் பறிமுதல்செய்தனர்.
இதனிடையே புதிதாக அமைக்கப்படவுள்ள கல்குவாரிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்துசெய்திட வலியுறுத்தி கொமராயனூர் பகுதியைச் சேர்ந்த ஐந்து வார்டு உறுப்பினர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவனிடம் நேற்று (ஜூன் 22) மீண்டும் இரண்டாவது முறையாகக் கோரிக்கை மனு அளித்தனர்.