இது தொடர்பாக எம்.பி பார்த்திபன் கூறுகையில், "சேலம் மாவட்ட மக்களின் உயிரோடு விளையாடும் சந்துக்கடை (மதுபானக்கடை) நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொகுதி மக்களின் சார்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபா கணிகரைச் சந்தித்து மனு அளித்தேன்.
கரோனா தொற்றால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடி வரும் நிலையில் சட்டத்திற்குப் புறம்பாக கலப்படம் செய்யப்பட்ட விஷத் தன்மையுடைய மதுவை விற்பனை செய்து வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் ஆளும் கட்சியைச் சேர்ந்த அதிமுகவினர் சட்டவிரோதமாக போலி மதுபானம் விற்பனை செய்ய சந்துக்கடைகள் நடத்துகிறார்கள். சேலத்தில் அரசு மதுபானக் கடைகளின் மொத்த எண்ணிக்கை 217 மட்டுமே.
ஆனால், சட்டவிரோதமாக சந்துக்கடை நடத்துபவர்கள் அரசு மதுபானக் கடைகளில் குவார்ட்டர் பாட்டிலை ரூ.120, ரூ.130 என மொத்தமாக கொள்முதல் செய்து தங்களுடைய வீட்டில் வைத்து அரசு மதுக்களில் கலப்படம் செய்து ரூ.250, ரூ.300 என 24 மணி நேரமும் விற்பனை செய்கின்றனர்.
இதை வாங்கிக் குடிப்பதால் எங்கள் கணவன்மார்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள் என பெண்கள் கண்ணீரோடு என்னிடம் புகார் தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் புகார் தெரிவித்தவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.
சேலத்தில் தெருவுக்கு தெரு கலப்படம் செய்யப்பட்ட மதுபானங்கள் சந்துக்கடைகள் மூலம் விற்பனை செய்து கொள்ள அனுமதி அளித்தது யார்? என விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
உழைக்கும் வர்க்கத்தின் கூலிப்பணம் அனைத்தையும் சந்துக்கடை வியாபாரிகள் கலப்படம் செய்யப்பட்ட மதுவை விற்பனை செய்து கொள்ளை அடிக்கின்றனர்.
வருமானத்தை இழந்த ஏழை குடும்ப பெண்கள் குடும்பம் நடத்த முடியாமல் , கைக்குழந்தையுடன் எனது அலுவலகத்திற்கு வந்து கண்ணீரோடு காவல்துறை அலுவலர்களை சந்தித்து சட்டவிரோதமான கடைகளை ஒழித்துக் கட்டவேண்டும் எனப் புகார் தெரிவிக்கிறார்கள்.
எனவே காவல்துறை கண்காணிப்பாளர் சேலம் மாவட்ட மக்களைக் காப்பாற்ற வேண்டும். மக்களின் உயிரோடு விளையாடும் சந்துக்கடை நடத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் " என்று தெரிவித்தார்.
மேலும் சந்துக்கடை மூலம் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவது குறித்து மக்களவை உறுப்பினர் புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.