கோவை, ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அம்மன்குளம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் தங்கராஜ்(55). இவர் அவரது மனைவி கமலம்மாள்(51), மாமியார் காளியம்மாள்(70). மூவரும் ஹவுசிங் யூனிட்டில் வசித்து வருகின்றனர்.
இவருக்கு அதே பகுதியில் உள்ள வேறு ஒரு பெண்ணுடன் நீண்ட நாட்களாக தொடர்பு இருப்பதாக அவரது மனைவிக்கு தெரியவருகிறது. கடந்த மூன்று தினங்களுக்கு முன் அந்த பெண்ணின் வீட்டிற்கு இவர் மனைவி சென்று பார்க்கும் பொழுது தங்கராஜன் அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார்.
இதனால் தங்கராஜின் மனைவி அவரிடம் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் இவர்கள் அவர்களது வீட்டிற்கு வந்துள்ளனர். இது குறித்து கடந்த இரு தினங்களாகவே தங்கராஜின் மனைவி, மாமியார் தங்கராஜிடம் வாக்குவாதம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று(ஜூலை 8) இரவு சுமார் 9 மணியளவில் மீண்டும் வீட்டில் சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டை தீவிரம் அடைந்திட தங்கராஜ் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை அவரது மனைவி, மாமியார் இருவர் மீது ஊற்றி பற்ற வைத்து விட்டு அங்கிருந்து வீட்டின் கதவை பூட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் விட்டின் ஜன்னல் வழியே கரும்புகை வருவதைக் கண்டு அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, இருவரும் தீயில் எரிந்து கொண்டு இருந்துள்ளனர். உடனே அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஆம்புலன்ஸ் வராத நிலையில் அக்கம்பக்கத்தினரே ஆட்டோவில் கோவை அரசு மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்து வந்துள்ளனர். இருவருக்கும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில், மாமியாருக்கு சிறிதளவு காயம் ஏற்பட்டிருந்ததால் அவர் வீடு திரும்பினார்.
ஆனால் மனைவி கமலம்மாள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய ராமநாதபுரம் காவல் துறையினர், தப்பி ஓடிய தங்கராஜை தேடிப்பிடித்து கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.