கர்நாடக மாநிலம் நந்திமலை உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
நீர்வரத்தால் ஒசூர் கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி கேஆர்பி அணை உள்ளிட்ட தமிழ்நாடு அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மட்டுமன்றி தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கெலவரப்பள்ளி அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் வழியாக நேற்றைய செப்டம்பர் 10 நிலவரப்படி 480 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று செப்டம்பர் 11 தென்பெண்ணை ஆற்றின் வழியாக கெலவரப்பள்ளி அணைக்கு 960 கனஅடி நீர்வரத்து உள்ளது.
கனமழை காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து ஒரேநாளில் 480 கனஅடி நீர் கூடுதலாக வருகிறது. நீர்வரத்து அதிகரிப்பது ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் நீரில் தொழிற்சாலை ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு நுரைகளுடன் வருவது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.