சென்னை ஆவடியை அடுத்த அயப்பாக்கம், திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அமிர்தராஜ் (25). அவரது உறவினர் பிரபாகரன் (24).
இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில்,நேற்று இரவு 10மணியளவில் அமிர்தராஜ், பிரபாகரன் இருவரும் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் இருவரையும் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து இருவரையும் வெட்டி உள்ளனர்.
இதையடுத்து, அமிர்தராஜ், பிரபாகரன் இருவரும் அக்கும்பலிடமிருந்து தப்பி ஓடினர். இருந்த போதிலும் அந்த கும்பல் அவர்களை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி உள்ளனர்.
இதில், இருவருக்கும் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக திருமுல்லைவாயல் காவல் ஆய்வாளர் புருஷோத்தமன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்.
அதில், இருவரையும் கொலை செய்ய முயற்சி செய்தது அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (24), சண்முகவேல் (19), பன்னீர்செல்வம் (20) மற்றும் 17வயது உடைய சிறுவன் ஆகியோர் என தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த நான்கு பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.
மேலும், விசாரணையில், முன்விரோதம் காரணமாக அமிர்தராஜ், பிரபாகரன் இருவரையும் சசிகுமார் உள்ளிட்டோர் கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது.