தருமபுரி மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டமானது மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் யசோதா மதிவாணன் தலைமையில் நடைபெற்றது.
அதிமுக ஊராட்சிக் குழு உறுப்பினர் காவேரி சென்ற மாதம் தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு நாளிதழ் விளம்பரத்தில் ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், புகைப்படங்கள், அவர்கள் பெயர்களை ஏன் வெளியிடவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த சோழன், தங்களுக்கு எதுவும் தெரியாது - அரசு உத்தரவுப்படிதான் விளம்பரம் வெளியானது என்று பதிலளித்தார்.
மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் பெயர்களை வெளியிடக் கூடாது என்று அரசாணை இருக்கிறதா அந்த அரசாணையை காட்ட வேண்டும் எனத் தொடர்ந்து குரல் எழுப்பினார். இதற்குப் பதில் அளிக்க முடியாமல் அலுவலர்கள் திணறினர்.
தொடர்ந்து காவேரி பேசும்போது, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பெயர்கள் இடம்பெற்ற விளம்பரங்கள் வெளியாகின. ஆனால் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக உள்ள தங்கள் பெயர்கள், புகைப்படங்கள் நாளிதழில் வழங்கப்பட்ட விளம்பரங்களில் வெளியிடவில்லை.
வேண்டும் என்றே உறுப்பினா்களை அவமதிக்கும் செயல்களில் அலுவலர்கள் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டினார். மாவட்ட ஊராட்சிக் குழு நிதி ஆறு கோடியே 65 லட்சம் ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதற்குள் ஆறு கோடியே 40 லட்சம் செலவுசெய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த நிதி பெற்று தர வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.
ஊராட்சி குழு கூட்டம் தொடங்கிய போது அனைவரையூம் வரவேற்று பேசிய மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தலைவர் யசோதா மதிவாணன் உறுப்பினரின் கேள்விக்கு எந்தவித பதிலும் அளிக்காமல் கூட்டம் முடியும் போது நன்றி தெரிவித்து முடித்துக் கொண்டார்.