ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகேயுள்ள வன்னிவேடு கிராமத்தில் நரிக்குறவர் காலனி பகுதியில் வசிப்பவர் விஜய் (20). இவருக்குச் சொந்தமான வீட்டில் வன விலங்குகளை வெடிவைத்து வேட்டையாடுவதற்காக, நாட்டு வெடிகளை அனுமதியின்றி தயாரித்துள்ளனர். அவருக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த உழைப்பாளி, எஜமான், தமிழன், நந்தினி, வேதவள்ளி ஆகியோர் சேர்ந்து வெடிகளை தயாரித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்துச் சிதறியதில் வீடு முழுவதும் இடிந்து தரைமட்டமானது. இதில், அனைவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பின் வீட்டின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சிகிச்சைப் பலனின்றி உழைப்பாளி என்பவர் பலியானார். எஜமான், விஜய், தமிழன், நந்தினி, வேதவள்ளி ஆகியோர் அனைவரும் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து வாலாஜா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனம், வருவாய் கோட்டாட்சியர் இளம்பகவத் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பொள்ளாச்சி அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 586 கிலோ பான் மசாலா பறிமுதல்!