இறைச்சி வியாபாரிகள் சங்கத்தில் 62 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
சென்னை புளியந்தோப்பு பாடிசன்புரம் லைன் தெருவில் இறைச்சி வியாபாரிகள் சங்கம் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்த பீரோவை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் உடைத்து அதிலிருந்த 61.50 லட்சம் ரூபாய் பணத்தை கடந்த 21ஆம் தேதி கொள்ளையடித்து சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி இந்தக் கொள்ளையில் தொடர்புடைய புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சாலமன்( 20), சபி (19) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.இதையடுத்து, அவர்களிடமிருந்து கொள்ளையடித்த 39 லட்ச ரூபாய் பணம், பூட்டை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பி, கத்தி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைப்பதற்கு முன்னதாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது குற்றவாளிகளில் ஒருவரான சாலமன் என்பவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
இதனால் உடனடியாக சாலமனை சுகாதார துறை அலுவலர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று அறையில் தனிமைப்படுத்தப்படுத்தினர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சாலமன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனால் மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் காவல் துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் வழக்கில் எஸ்.ஐ கைது