கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் கரோனா தடுப்பு பணியில் இருக்கும் மருத்துவர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரும் இத்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் இதுவரை 637 போலீசார் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த காவல் ஆய்வாளருக்கு காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தனது சொந்த செலவில் தடுப்பூசியை வாங்கிக் கொடுத்து அவர் உயிரைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பாலமுருகன் என்பவர், கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதால், சிகிச்சை பலனளிக்கவில்லை.
இந்நிலையில் கரோனா தடுப்பூசி சோதனையில் உள்ள ACTEMRA tocilizumab எனும் மருந்தை மருத்துவர்கள் கடைசி கட்ட முயற்சியாக பரிந்துரை செய்தனர். ஒரு தடுப்பூசியின் விலை ரூ.75 ஆயிரமாகும், மூன்று நாள்கள் இந்த தடுப்பூசியை போட வேண்டும்.
இந்த செய்தியைக் கேட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், தனது சொந்த செலவில் இந்த மருந்தை காவல் ஆய்வாளர் பாலமுருகனுக்கு வாங்கிக் கொடுத்து உதவியுள்ளார். பாலமுருகனுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு உடல் நிலை தேறி வருகிறார். காவல் துறையில் தன் கீழ் பணிபுரியும் ஒரு ஆய்வாளருக்கு காவல் ஆணையர் இவ்வளவு முயற்சி செய்து உயிரைக் காப்பாற்றியது பலராலும் பாராட்டப்படுகிறது.
இந்த தடுப்பூசியை தான் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திராஜன், ஜெ.அன்பழகன் சிகிச்சை பெற்ற போது அனுப்பி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.